credit ns7.tv
நவம்பர் 7 ஆம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்படுமென பாஜக மூத்த தலைவர் சுதிர் முன்கண்டிவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. ஆனால் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கொடுத்த வாக்குறுதியின் படி சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டுமென போர்க்கொடி தூக்கியது சிவசேனா. ஆனால் பாஜகவோ அதுபோன்ற எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை என்றும் மீண்டும் தேவேந்திர ஃபட்னாவிஸே மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்பார் என அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் குழுவும் ஆதித்யா தாக்கரே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்கள் குழுவும் ஆளுனரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். பாஜக தொடர்ந்து முரண்டுபிடித்தால் ஆட்சி அமைப்பதற்கான மாற்று வாய்ப்புகள் குறித்து பரிசீலிப்போமென அதிரடியாக அறிவித்தது சிவசேனா.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவசேனாவை சேர்ந்த 45 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார் அக்கட்சியின் எம்பி சஞ்சய் காக்கடே. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்து பேசியது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. இந்த சந்திப்பு குறித்து சரத்பவாரிடம் கேட்கப்பட்ட போது, சஞ்சய் ராவத் தனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு சென்றதாக கூறினார். இதைத் தொடர்ந்து சிவசேனாவுக்கு வெளியில் இருந்து காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் ஆதரவு கொடுக்கலாம் என தகவல் பரவியது.
மகாராஷ்டிரா அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் விரைவில் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் நவம்பர் 7ஆம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்படுமென பாஜக மூத்த தலைவர் சுதிர் முன்கண்டிவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து முகலாயர்கள் மராட்டியர்களை மிரட்டிப் பணியவைக்க முயன்றது போல தற்போது பாஜக சிவசேனையை பணியவைக்க பார்க்கிறது என சிவசேனாவின் கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது. வரும் 7ஆம் தேதியுடன் முந்தைய பாஜக ஆட்சியின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், அடுத்து அமையப்போவது பாஜக தலைமையிலான ஆட்சியா அல்லது சிவசேனா தலைமையிலான ஆட்சியா அல்லது இரண்டுமில்லாமல் குடியரசு தலைவர் ஆட்சியா என்பதே தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாக உள்ளது.