credit ns7.tv
மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 6 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் நேற்று சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 6 லட்சம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என முதலமைச்சர் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, சுவர் இடிந்து விழுந்ததால் வீடு இழந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் புதிதாக அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பவானி ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் 300 வீடுகளுக்கு மாற்றாக குடிசை மாற்று வாரிய வீடுகள் வழங்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர், தமிழகத்தை குடிசையில்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு மீது குற்றம் சாட்டி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, இதில் அரசியலை நுழைக்கக் கூடாது என தெரிவித்தார்.