புதன், 4 டிசம்பர், 2019

மாநிலங்களவையில் நிறைவேறியது SPG சிறப்பு பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா!

credit ns7.tv
Image
SPG சிறப்பு பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.
சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.  இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், சிறப்பு பாதுகாப்புக்கான சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது, சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே 4 முறை திருத்தப்பட்டதாகவும், ஒவ்வொரு முறையும் சோனியா காந்தியின் குடும்பத்தை மனதில் வைத்தே இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். முதன்முறையாக, அவ்வாறு இல்லாமல் இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்தார். இதையடுத்து இந்த சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்காவின் வீட்டிற்குள் கார் ஒன்று அத்துமீறி நுழைந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த அமித் ஷா, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் நடந்ததும் அதுபற்றி தம்மிடடோ அல்லது சிஆர்பிஎஃப்-பின் இயக்குநரிடமோ பிரியங்கா காந்தி தெரிவித்திருக்க வேண்டும் என்றும், மாறாக அவர் ஏன் ஊடகங்களிடம் சென்றார் என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.