செவ்வாய், 3 டிசம்பர், 2019

தெற்காசிய விளையாட்டு போட்டி: முதல் நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கம்!

Image
நேபாளத்தில் நடைபெறும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளின் முதல் நாளான இன்று ஒரு தங்கம், இரண்டு வெள்ளி உட்பட இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது.
நேபாளத்தின் காத்மண்டு மற்றும் பொக்ரா நகரங்களில் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா சார்பில் 15க்கும் மேற்பட்ட விளையாட்டு பிரிவுகளில் 487 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் நாளான இன்று டிரையத்லான் பிரிவில் இந்தியா ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்களை அள்ளியுள்ளது.
750மீ நீச்சல், 20கிமீ சைக்கிளிங் மற்றும் 5 கிமீ ஓட்டம் என தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதே டிரையத்லான்.
டிரையத்லான் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஆதர்ஷா சினிமோல் தங்கப் பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 1:02.51 மணி நேரங்களில் கடந்து இலக்கை அடைந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கமே தங்கமாக அமைந்தது. இதே போல மற்றொரு இந்திய வீரர் பிஷ்வோர்ஜித் ஸ்ரீகோம் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1:02:59 மணி நேரங்களில் கடந்தார்.
இதே போல டிரையத்லான் மகளிர் பிரிவில் இந்தியாவின் தெளடம் சோரோஜினி தேவி வெள்ளிப்பதக்கமும் (1:14:00), மோகன் பிராக்ன்யா வெண்கலமும் (1:14:57) வென்றனர்.

credit ns7.tv