திங்கள், 9 டிசம்பர், 2019

43 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் - கட்டட உரிமையாளரை கைது செய்து போலீஸார் விசாரணை....!


Image
டெல்லியில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து கட்டட உரிமையாளரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
டெல்லி ஜான்சி ராணி சாலையில் உள்ள அனஜ் மண்டி பகுதியில், பள்ளி குழந்தைகளுக்கான பேக் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் துாங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், மளமளவென ஆலை முழுவதும் தீ பரவியது. கடும் புகை மூட்டம் ஏற்பட்டதில் ஆலையில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த கோர விபத்தில் உடல் கருகி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து நேரிட்ட பகுதி உருக்குலைந்து காணப்பட்டதால், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் வரவழைக்கப்பட்டு, மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து குறித்து ஒரு வாரத்துக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு குடியசுரத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், காயம் அடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். 
பிரதமர் மோடி, அனஜ் மண்டி பகுதியில் நேரிட்ட தீ விபத்து மிகவும் கொடூரமானது என்றும், படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதேபோன்று, தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று, அம்மாநில பாஜக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரி அறிவித்துள்ளார்.
இதனிடையே, தீ விபத்து நடந்த கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் சிக்கிய பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

credit ns7.tv