செவ்வாய், 10 டிசம்பர், 2019

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் 5 பேர் பலி; மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Image
நியூசிலாந்தில் எரிமலை திடீரென வெடித்ததால் சுற்றுலா சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ள நிலையில், மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது வக்காரி எரிமலை. வெள்ளை தீவு என வர்ணிக்கப்படும் இந்த எரிமலையை ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென எரிமலை சீற்றத்துடன் வெண் புகையை வெளியேற்றி வருகிறது. வானில் சுமார் 12,000 அடி உயரத்துக்கு வெண் புகை பரவியிருப்பதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே, எரிமலையை காண சென்ற ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தீவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து வந்த மீட்பு படை வீரர்கள், தீவில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்களில் பலர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தீவுக்கு சுற்றுலா சென்ற ஏராளமானோர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில் மீட்பு பணி மிகவும் சவாலாக இருக்கும் என மீட்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். 
படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தெரிவித்துள்ளார். எரிமலை சீற்றத்தில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 

credit ns7.tv