சாமியார் நித்தியானந்தாவின் பிடியில் குஜராத் பெண் தொழிலதிபர் ஒருவர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமறைவாக உள்ள நித்தியானந்தா எங்கு உள்ளார்? என கண்டுபிடிக்க முடியாமல் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்களே திணறி வந்தாலும், தினம் தோறும் வீடியோ வெளியிடுவதை மட்டும் அவர் நிறுத்தியபாடில்லை. தற்போது நித்யானந்தாவை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்தியானந்தாவின் பிடியில் குஜராத்தைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் பெண் அதிபர் ஒருவர் சிக்கியிருப்பதாகப் பரவியுள்ள தகவல்தான் அந்த பரபரப்பின் பின்னணி.
குஜராத்தை சேர்ந்த பெண் தொழிலதிபரான மஞ்சுளா பூஜா ஷெராப். கலோரெக்ஸ் எனும் பெயரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தீவிர சிவபக்தையான இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு வந்திருந்தபோது அங்குள்ள பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவை சந்தித்துள்ளார். அதுமுதல் நித்தியானந்தாவின் தீவிர பக்தையாகவும் மாறியுள்ளார் மஞ்சுளா.
பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மஞ்சுளாவுக்கு இருப்பதை அறிந்த நித்யானந்தா, அகமதாபாத்தில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை அவரிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மஞ்சுளாவும் அகமதாபாத்தில் இருந்த தனது சிபிஎஸ்இ பள்ளி வளாகத்திலேயே நித்தியானந்தாவுக்கு ஆசிரமத்தை அமைத்துக்கொடுத்துள்ளார். இதில் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் உட்பட பலர் தங்க வைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சைகளும் எழுந்தன. பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பின் நித்தியானந்தா அகமதாபாத் ஆசிரமத்தில் தான் சில காலம் தங்கியிருந்துள்ளார். ஆனால் ஜனார்த்தன சர்மாவின் மூலம் மீண்டும் பிரச்சனை வெடித்ததால் அங்கிருந்து தப்பி உத்திரப்பிரதேசம் வழியாக நேபாளம் சென்று வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
ஈக்குவடார் அருகே தீவு ஒன்றை வாங்கி கைலாசா எனும் நாட்டை உருவாக்க உள்ளதாக அறிவித்த நித்தியாந்தாவுக்கு 5 முதல் 6 கோடி வரை மஞ்சுளா நிதியுதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பாலியல் வழக்குகளில் சிக்கிய நித்தியானாந்தாவை இன்றளவும் சிவபெருமானின் அவதாரம் என மஞ்சுளா தீவிரமாக நம்பி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அவர் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், ஆசிரமத்துக்கு வழங்கிய இடம் சட்டத்துக்குப் புறம்பான இடம் என குஜராத் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், மாநில பாடதிட்டத்தில் இருந்த தனது பள்ளிகளை முறைகேடான ஆவணங்களை தயார் செய்து சிபிஎஸ்இ அந்தஸ்திற்கு உயர்த்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நித்தியானந்தா விவகாரம் பூதாகரமான பின் மஞ்சுளாவுக்கு எதிரான புகார்களை குஜராத் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தற்போது முன்ஜாமீன் பெற்றிருந்தாலும் வெளிநாடு தப்பியோடிவிடுவார் என மஞ்சுளாவின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர் குஜராத் போலீசார். அன்று ரஞ்சிதா தொடங்கி இன்று மஞ்சுளா வரை நீண்டு கொண்டு போகும் நித்தியானந்தாவின் பட்டியல் என்று தான் முடிவுக்கு வரும்? அவர் எப்போது சிக்குவார் எனும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
credit ns7.tv