மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டதிருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 125 பேரும், எதிராக 99 பேரும் வாக்களித்தனர்.
குடியுரிமை சட்டதிருத்த மசோதா கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது மசோதா குறித்து விவரித்துப் பேசிய அவர், 1947ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் 20 சதவீதம் அளவுக்கு சிறுபான்மையினரின் சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதால், அவர்களின் துன்பத்தை போக்கும் வகையில், குடியுரிமை சட்டதிருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டார். இந்த மசோதா இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது, என தவறான தகவல் பரப்பப்படுவதாகக் கூறிய அமித்ஷா, இந்த சட்டம் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எந்த விதத்திலும் எதிரானது அல்ல என்றார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், இந்த மசோதா நாடாளுமன்ற முகத்தின் மீது விழுந்த அறை என விமர்சித்தார். பாஜக தனது இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்துவதற்காகவே, அரசியல் சாசன விதிகளை மீறி, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டிய ப.சிதம்பரம், மசோதா தொடர்பாக 6 கேள்விகளை எழுப்பி, அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
மசோதாவில் இலங்கையில் உள்ள இந்துக்களையும், பூடானில் உள்ள கிறிஸ்தவர்களையும் பற்றிக் குறிப்பிடாதது ஏன், என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பினார். மசோதாவில் மதரீதியான பாகுபாட்டை மட்டும் கருத்தில் கொள்வது ஏன் என்றும், அரசியல் ரீதியில் மக்கள் மீது பாகுபாடு காட்டப்படவில்லையா என்றும், கேள்விக் கணைகளை தொடுத்தார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும், என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
credit ns7.tv