வெள்ளி, 6 டிசம்பர், 2019

நரசிம்ம ராவ் நினைத்திருந்தால் சீக்கிய கலவரத்தை தடுத்திருக்கலாம் - மன்மோகன் சிங்

Image
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் அறிவுரையை அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் மட்டும் கேட்டிருந்தால் 1984ல் சீக்கியர் படுகொலை நிகழ்வு நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கும் என்று மன்மோகன் சிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் 100வது பிறந்த தினம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் சீக்கிய படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் பேசுகையில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. அன்றை தினம் மாலைவேளையில் அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவின் வீட்டிற்கு சென்று, நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது, ராணுவத்தை விரைவாக வரவழைக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அவரிடம் தெரிவித்தார்.
குஜ்ராலின் அந்த அறிவுரைக்கு நரசிம்மராவ் செவிசாய்த்திருந்தால் 1984ல் அந்த துயர சம்பவம் நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கும்” என்று மன்மோகன் கூறினார்.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது நாடாளுமன்றத்தில், சீக்கிய படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார். அவையில் அவர் பேசுகையில், சீக்கிய மக்களிடம் இதற்காக மன்னிப்பு கோருவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv