வெள்ளி, 6 டிசம்பர், 2019

இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கென பிரத்யேக சேவை...!

credit ns7.tv
Image
இரவு நேரங்களில் பெண்களுக்கு உதவும் நோக்கில், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
தெலங்கானாவில், பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருவதால் அதனைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒரு புதிய சேவையை அமல்படுத்த ஹரியானா அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், இரவு நேரங்களில் தனியாக வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு என பிரத்யேக டேக்ஸி சேவையை சண்டிகர் காவல்துறையினருடன் இணைந்து ஹரியானா அரசு செயல்படுத்தப்போவதாக குறிப்பிட்டார்.
இரவில் சரியான போக்குவரத்து வசதி கிடைக்காமல், தவிக்கும் பெண்களை பாதுகாப்பாக அவர்களின் இருப்பிடங்களுக்கு கொண்டுசேர்ப்பதற்கான டேக்ஸி சேவையை தொடக்கிவிட்டனர் சண்டிகர் போலீசார் என்று தெரிவித்த அமைச்சர் அனில் விஜ், அந்த டேக்ஸி சேவையை பெற 100 என்ற அவசர உதவி எண்ணிற்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தின் எண்ணிற்கோ தொடர்பு கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், டேக்ஸி சேவையை அழைக்கும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு 3 நிமிடத்திற்குள்ளாகவே சென்று அழைத்துச்செல்லப்படுவார்கள் எனவும் கூறினார்.
இந்த சேவைக்கென பிரத்யேகமான 400 புதிய ரோந்து வாகனங்களையும், PCR கொண்ட வாகனங்களையும் வாங்க மாநில அரசு முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்தார். பணி முடித்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் பெண்களுக்கு இந்த சேவை மிக பயனுள்ளதாக இருக்கும் என அம்மாநில மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.