தெலங்கானாவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல் , குற்றவாளிகள் காவல்துறையினரை கற்களைக் கொண்டு தாக்கியதாகவும், தற்காத்துக் கொள்ளும் நோக்கிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை என தெரிவித்தார். போலியான முறையில் என்கவுன்டர் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள கபில் சிபல், காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை ஏற்க முடியாது என கூறினார். தெலங்கானாவில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கிறது என்பதை இந்த என்கவுன்டர் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கபில் சிபல், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தீவிரவாதம் குறித்து பேசும் பிரதமர் நரேந்திர மோடி, பாலியல் குற்றங்கள் குறித்து பேச மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
credit ns7.tv