ஞாயிறு, 15 டிசம்பர், 2019

குடியுரிமை சட்டம் : மேற்கு வங்கத்தில் வெடித்தது வன்முறை!

credit ns7.tv
Image
புதிதாக இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்குவங்க மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால், பதற்றம் நிலவுகிறது.
புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் மூண்டது. இதனை அடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த, அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவையையும் அரசு முடக்கியுள்ளது. இதனிடையே மேற்கு வங்கத்திலும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர். பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
தீப்பற்றி எரிந்த பேருந்துகளால் கொல்கத்தா, முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா போன்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் போர்க்களமாக காட்சியளித்தன. ஹவுரா மாவட்டத்தில் 5 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து, வன்முறையில் ஈடுபட்டனர். ரயில் நிலைய அறைகளும் கொளுத்தப்பட்டன. இதனால், ரயில் சேவை முடங்கி பயணிகள் அவதிக்குள்ளாகினர். 
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் காவல் நிலையம் ஒன்றை போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். இதில் சில காவலர்கள் படுகாயம் அடைந்தனர். கல்வீச்சில் தாக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட காவலர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிதாக கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அதே நேரம் கலவரத்தை ஒடுக்காமல் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் இதே நிலை தொடர்ந்தால் மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்றும் அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார்.