credit ns7
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு நேற்றிரவு 8.45 மணியளவில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு 1990 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் இரு முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற காங்கிரஸ் முதலமைச்சர்களின் ஆலோசானை கூட்டத்தில் மன்மோகன் சிங் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.