புதன், 1 ஜூலை, 2020

இந்தியாவில் இருந்து 143 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாடு திரும்பினர்!

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 50% ஆக குறைத்துக் கொள்ளும்படி இந்தியா கோரியதை தொடர்ந்து இந்தியாவில் இருந்த 143 தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் திரும்பினர். 

டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்த அபித் ஹூசைன், முகமது தாஹிர் ஆகிய இரு அதிகாரிகள் பாகிஸ்தானின் உளவு அமைப்பாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இரண்டு அதிகாரிகளும் இந்தியாவால் வரவேற்கப்படாத நபர்களாக அறிவிக்கப்பட்டு இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

மேலும் இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்ற பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளை துன்புறுத்தியதாக கூறப்பட்டது. 

இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு மோசமான முறையில் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு கவலை தெரிவித்திருந்த இந்தியா டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50% குறைக்க வேண்டும் என மத்திய அரசு பாகிஸ்தானிடம் வலியுறுத்தியது. 

மேலும் அதே அளவில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் குறைக்கப்படவுள்ளதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது. இது 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்தியா தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இன்று இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 143 பேர் பாகிஸ்தான் திரும்பினர். டெல்லியில் இருந்து வேன் மூலம் அட்டாரி வாகா எல்லையை அடைந்த தூதரக அதிகாரிகள், பின்னர் பாகிஸ்தான் சென்றடைந்தனர். இதேபோல் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த 38 இந்திய தூதரக அதிகாரிகளும் இன்று இந்தியா திரும்பியுள்ளனர்.