புதன், 1 ஜூலை, 2020

கொரோனாவின் மோசமான தாக்கம் இனி தான் வரக்கூடும்: உலக சுகாதார அமைப்பு!

கொரோனா தொற்றின் மோசமான தாக்கம் இனிமேல் வர வாய்ப்புள்ளதாக  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பால் உலகளவில் 1.04 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5.08 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
பொருளாதார சரிவை சமாளிக்க உலக நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகின்றன. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

சீனா, முதல் கொரோனா பாதிப்பை உறுதி செய்த 6 மாதங்களுக்கு பிறகு உலகம் முழுவதும் 1 கோடி மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் இன்னும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையை தொடர விரும்புகிறோம். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், இது முடிவடைவதற்கான நேரம் அருகில் இல்லை என்பதுதான். பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கொரோனா தொற்றுநோய் வேகமடைகிறது. மோசமான தாக்கம் இனிதான் வரவிருக்கிறது’ என எச்சரித்துள்ளார். 

தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் அடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனை மற்றும் தொற்று கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.