புதன், 1 ஜூலை, 2020

வெளிநாட்டினருக்கு பிறந்தவருக்கு தேசப்பற்று இருக்காது: பாஜக எம்.பி.பிரக்யா சர்ச்சை கருத்து!

Image

வெளிநாட்டினருக்கு பிறந்த ஒருவருக்கு தேசப்பற்று இருக்காது என்று பாஜக எம்.பி.பிரக்யா தாகூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வான் மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே கடும் வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது. சீனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார் என்று ராகுல் காந்தியும், காங்கிரஸ்தான் 43,000 சதுர கி.மீ நிலத்தை சீனாவிடம் தாரைவார்த்து விட்டது என்று பாஜகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று பாஜக தலைவர்கள் சாடி வருகின்றனர்.

இந்நிலையில் சர்ச்சையாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவரான பாஜக எம்.பி.பிரக்யா தாகூர், வெளிநாட்டினருக்கு பிறந்த ஒருவருக்கு தேசப்பற்று இருக்காது என்று சோனியா மற்றும் ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கியுள்ளார்.  

இது குறித்துப் பேசிய அவர், மண்ணின் மைந்தன் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும் என்று அரசியல் அறிஞர் சாணக்யர் கூறியுள்ளார். ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்குப் பிறந்த ஒருவர் தேசபக்தராக இருக்க முடியாது என்றார்.

உங்களுக்கு இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால், நீங்கள் எப்படி தேசபக்தி உணர்வுகளை கொண்டிருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
நெறிமுறைகள் மற்றும் தேசபக்தி ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

பிரக்யா தாகூரின் இந்த பேச்சிற்கு காங்கிரஸ், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்தியபிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தானோபியா, ’எம்.பி.பதவிக்குரிய மாண்பை பிரக்யா அவமதித்து விட்டார். ஏற்கனவே அவர் தீவிரவாத வழக்கில் தொடர்புடையவர். தற்போது அவர் மனநிலையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று’ என்றார்.