உத்தரபிரதேச மாநிலம் ஃபைரோசாபாத் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் ‘முகக்கவசம் அணிய வேண்டும்’ என்ற வாசகத்தை 500 முறை எழுத வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் முகக்கவசம் அணிவது, கைகளை நன்றாக கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை தற்காலிகமாக நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதுதொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு முகக்கவசத்தின் முக்கியத்துவம் இன்று வரை புரியவில்லை என்பதும் நிதர்சனமாகவே உள்ளது. அதனால் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஃபைரோசாபாத் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக அவர்களை மாணவர்கள் போல் இம்போசிஷன் எழுத வைக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு 3-4 மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. இந்த வகுப்பை காவல்துறை அதிகாரி, மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோர் நடத்துவர். அவர்கள் முகக்கவசத்தின் முக்கியத்துவத்தையும், அதனை அணியாமல் வெளியே வருவதால் ஏற்படும் பாதகங்கள் குறித்தும் பாடம் நடத்துவார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்படும். முகக்கவசம் அணியாமல் வரும் நபர் இந்த வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது முடிந்தவுடன் அவர்கள் ஒரு பேப்பரில் ‘முகக்கவசம் அணிய வேண்டும்’ என்ற வாசகத்தை 500 முறை எழுத வேண்டும். அதன்பிறகு தான் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். முகக்கவசம் அணிய வேண்டும் என பலமுறை சொல்லியும், மக்கள் கேட்காததால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். பாடம் நடத்துவதை கவனிக்க பலமணி நேரம் அமர்ந்திருப்பதற்கு பதில் முகக்கவசம் அணிவதே நல்லது என பொதுமக்கள் அதனை அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.