தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாநிலம் முழுவதும் ழுழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரசந்தை மற்றும் மத்தூர், அரசம்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அத்துமீறி வெளியே வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மாவட்டத்திலுள்ள 135க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன மேலும் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் உள்ளவர்களை மட்டும் காவல்துறையினர் அனுமதித்தனர்.