வியாழன், 2 ஜூலை, 2020

சென்னையில் ஊரடங்கு நீட்டிக்க 88% பேர் விருப்பம்: சென்னை ஐ.ஐ.டி சர்வே

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கநிலை அமலில்    உள்ளது. ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் தமிழகத்தில் 6ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் , செங்கல்பட்டு காஞ்சிபுரம், மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆகிய 4 மாவட்டங்களில் அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு ஜூலை 5-ம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு நீட்டிப்பது குறித்த உத்தரவை பிறப்பிப்பார்.

கொரோனா ஊரடங்கு 100 நாட்கள் தாண்டிய நிலையில்  மக்கள்  மனநிலை எவ்வாறு உள்ளது? ஊரடங்கு உத்தரவை எவ்வாறு எடுத்துக் கொள்கின்றனர்? அதன் முக்கியத்துவம் உணரப்படுகிறதா? என்பது குறித்த நாடு முழுவதும்  3,136 பேரிடம் சென்னை ஐ.ஐ.டி நடத்திய ஆன்லைன் சர்வே குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த ஆன்லைன் சர்வேயில், 88% சென்னை வாசிகள் கொரோனா ஊரடங்கு சென்னையில் தொடர விருப்பம் தெரிவித்தனர். இருப்பினும், சென்னை பெருநகர பகுதிகளில் வணிகம் செய்பவர்கள் ஊரடங்கை நீட்டிக்க எதிப்பு தெரிவிக்கின்றனர்.

38% சென்னைவாசிகள் கடுமையான முழு ஊரடங்கு நிலை தொடர விருப்பம் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் முழு ஊராடங்கு தொடர் மாநிலத்தின் 54% மக்கள் விருப்பம் தெரிவித்தனர். சென்னையில் ஊரடங்கு நிலை வேண்டாம், அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறுபவர்களின் எண்ணிக்கை 12%-ஆக உள்ளது. மேலும், 50% சென்னை வாசிகள் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படலாம் என்று தெரிவித்தனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு ஊரடங்கு ஒரு முழுமயான தீர்வு இல்லை என்றாலும்,வாழ்வாதரத்தை தாண்டி சென்னை மக்கள் பொது சுகாதாரத்தில்  கொண்டுள்ள அக்கறையை பிரதிபலிப்பதாக சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ஏ.தில்லை ராஜனை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் மேற்கோள் காட்டியது.