வியாழன், 2 ஜூலை, 2020

ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்து வந்த போது நடந்தது என்ன? என்பது குறித்து பணியில் இருந்த பெண் காவலரின் கணவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பிரத்யேக பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 19-ம் தேதி இரவு சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழகத்தையே உலுக்கிய இந்த இரண்டு மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் (30.6.20) இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

பின்பு, சிபிஐ அதிகாரிகள் நேற்று (1.7.20) காலை முதல் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் முதல் கட்டமாக உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நேரடி சாட்சியான சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி பெண் காவலர் ரேவதி முக்கியமானவர். சம்பவத்தை நேரில் கண்டதாக அவர் அளித்த சாட்சி தான் இந்த மொத்த வழக்கையும் மாற்றியது. இந்நிலையில், அன்றைய இரவு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் நடந்தது என்ன? என்பதை ரேவதி வருத்தத்துடன் தனது கணவரிடம் பகிர்ந்திருக்கிறார். ரேவதி கணவர் இதுக் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டி இதோ.

“என் மனைவி காவல் நிலையத்தின் உள்ளே சென்றபோது இருவரையும் அடித்து கொண்டிருந்தனர். 10 மணி அளவில் தொலைபேசியில் பேசியபோது தந்தை, மகன் இருவரையும் அடித்து கொண்டிருப்பதாக கூறினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் தண்ணீர் குடிக்க கேட்டதாக எனது மனைவி வருத்தத்துடன் கூறினார். இருவர் உயிரிழப்பு தகவல் அறிந்து மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார்.சம்பவத்தின்போது பணியில் இருந்ததால் தனக்கு பிரச்சினை வரும் என கூறினார்.

அப்போது நான் கூறினேன் நமக்கு ரெண்டு பொட்ட புள்ள இருக்கு… நாளைக்கு நம்ம பிள்ளைக்கும் இப்படி நடக்கலாம். விசாரணையில் அன்னைக்கு ஸ்டேஷனில் என்ன நடந்ததோ அந்த உண்மையை சொல்லு…எனது மனைவிக்கு தைரியம் கூறி அழைத்துச் சென்றேன். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாதுகாப்பு கேட்டும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதே போல நானும் தைரியமாக இந்த பேட்டியை எங்குனாலும் கொடுப்பேன்… ஆனா எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்… ” என்றார்.