திங்கள், 13 ஜூலை, 2020

முடங்கிய ஜவுளி தொழில்... அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள்...!

சேலத்தில், கேரள பாணியிலான வேட்டி சேலை உற்பத்தி தொழில் முடங்கி உள்ளதால்,  அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தியதை போன்று பொருளாதார இழப்பையும் வெகுவாக ஏற்படுத்தி விட்டது. ஊரடங்கால் மூலப்பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும், உற்பத்தி செய்த  பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும் தொழில்துறை முடங்கியுள்ளது. ஜவுளித் தொழிலும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை, வாய்கால் பட்டறை, மன்னார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தயாராகி வந்த கேரள பாணியிலான வேட்டி சேலை உற்பத்தி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் குடோன்களில் தேங்கி கிடப்பதாக கூறும் உற்பத்தியாளர்கள், கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு டெலிவரி எடுக்கப்படாமல் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

வடமாநிலங்களில் இருந்து ஜரிகை உள்ளிட்ட மூலப் பொருட்கள் கிடைக்காததால் உற்பத்தி மந்த கதியில் நடப்பதாகக் கூறும் ஜவளி உற்பத்தியாளர்கள், கடந்தாண்டு சீசன் காலத்தில் 20 கோடி ரூபாய் வரை வரத்தகம் நடைபெற்றதாகவும்,  இந்தாண்டு ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுமா என்பதே கேள்விக்குறிதான் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

சீசன் காலத்தில் நிற்க கூட நேரம் இல்லாமல் வேலை இருந்த நிலை மாறி, தற்போது சில மணி நேரங்களே உற்பத்தி நடைபெறுவதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் ஜவுளி ஊழியர்கள். ஜவுளித்துறையில் பொருளாதார இழப்பை மீட்டெடுக்க அரசு தலையிட்டு சலுகைகளை அறிவிக்க வேண்டும் எனவும், காய்கறி கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது போன்று, ஜவுளி கடைகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும் என்றும்  உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

உடையை உலகுக்கு அளிக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் ஊரடங்கால் பாதிக்கப்படாமல் இருக்க அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.