கர்நாடகா, மத்திய பிரதேசத்தையும் தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும், முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 20 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சச்சின் பைலட் ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கட்சி எம்எல்ஏக்களுடன் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அசோக் கெலாட் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே தன்னிடம் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், அசோக் கெலாட் அரசு தனது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தானும் தனது ஆதரவாளர்களும் இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், லாயத்தில் இருந்து குதிரைகள் அனைத்தும் ஓடிவிட்ட பிறகு தான் நாம் விழிப்போமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.