தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உத்தரப்பிரதேசத்தின் நாயகனாக உருவெடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகரோ.. அல்லது அரசியல் தலைவரோ அல்ல.. ஒரு காவல் அதிகாரி. ஒரு பிரபலத்தை போன்று இவர் குறித்த பதிவுகள் கடந்த சில தினங்களாக இணையத்தை ஆக்கிரமிக்க, உத்தரப்பிரதேச மாநில ரவுடிகளில் ஒருவரை தீர்த்துக்கட்டி புதிய அத்தியாயம் எழுதியிருக்கிறார் சிறப்பு எஸ்பி தினேஷ் குமார்.
சட்டவிரோத சொத்து சேர்ப்பு, கொலை, கொள்ளை, கடத்தல் என உத்தரப்பிரதேசத்தின் கான்பூரை மிரட்டிக்கொண்டிருந்த விகாஷ் துபே, காவல்துறைக்கே சிம்ம சொப்பனமாக இருந்தார். அரசியல் கட்சிகளிடத்தில் இருந்த செல்வாக்கும், காவல்துறையிலேயே இருந்த கறுப்பு ஆடுகளும் விகாஷ் துபேவுக்கு உறுதுணையாக இருக்க, காவல்துறைக்கு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தார் விகாஷ் துபே.
இந்நிலையில் தான், கான்பூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் திவாரியை கொலை செய்ய முயன்றதாக, விகாஷ் துபேவை கைது செய்ய, அவரது சொந்த ஊரான பிக்ரு கிராமத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அங்கேயே வைத்து 8 காவல் அதிகாரிகளை துடிதுடிக்க சுட்டுக்கொன்ற விகாஷ் துபேவும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்திய வரலாற்றில் இத்தனை காவல் அதிகாரிகள் ரவுடி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்தே மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வைத்து விகாஷ் துபேவை கைது செய்தது சிறப்பு படை.
இதற்கிடையே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக விகாஷ் துபேவை சுட்டுக்கொன்றது என்கவுன்ட்டர் சிறப்பு படை. இந்த திட்டத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் சிறப்பு படையை வழிநடத்திய சிறப்பு எஸ்பி தினேஷ் குமார். இதனைத் தொடர்ந்தே இவரை ஒரு ஹீரோவாக சித்தரித்து பலரும் சமூகவளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரபல தாதாவை சுட்டுக் கொன்றதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர் அவரது பெற்றோர். சேலம் மாவட்டம் லக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னதண்டா கிராமத்தில் வசித்து வரும் தினேஷ்குமாரின் தந்தை பிரபு, சரியான போக்குவரத்து வசதி இல்லாத நிலையிலேயே, மலை கிராமத்தில் இருந்து சென்று தனது மகன் கல்வி பயின்றதாகத் தெரிவித்துள்ளார். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர் தனது மகன் என பெருமிதம் கொள்ளும் தந்தை பிரபு, விகாஷ் துபே விவகாரத்தில் தனது மகன் தனது கடமையையே செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொந்த ஊருக்கு வராததால், தினேஷ்குமாரை பார்க்க முடியவில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றார் தந்தை பிரபு. அராஜக செயல் புரிந்து வந்த ரவுடி விகாஷ் துபேயின் அத்தியாயத்திற்கு முடிவு கட்டியிருப்பதன்மூலம், உத்தரப்பிரதேச மக்களின் நாயகனாகியிருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரி தினேஷ்குமார்.