புதன், 1 ஜூலை, 2020

சாத்தான்குளம் விவகாரம்: உண்மை தெரிந்தும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்? - கனிமொழி கேள்வி

சாத்தான்குளம் வியாபாரிகள் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தம் வழியும் நிலையில் அழைத்து செல்லப்பட்டிருப்பது தெரிந்தும், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட முக்கிய செய்தியை பகிர்ந்துள்ள கனிமொழி, வியாபாரிகள் அழைத்து செல்லப்பட்ட காரின் இருக்கையில் ரத்தக்கறை படிந்து இருந்த நிலையில், மருத்துவர் எப்படி உடற்தகுதி சான்றிதழ் அளித்தார் ? என கேள்வி எழுப்பி உள்ளார். மாஜிஸ்திரேட் எப்படி கவனிக்காமல் விட்டார் ? எனவும், சிறை அதிகாரிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் எதற்காக சிறையில் அடைத்தனர் ? என்றும் கேட்டுள்ளார். இவற்றுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரிந்தும் ஒருவர்கூட கைது செய்யப்படாதது ஏன் என்றும் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். 

 

சாத்தான்குளத்தில் மரணத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோருக்கு பணி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.எஸ்.பி கோபி, தூத்துக்குடி மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ.எஸ்.பி குமார், நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.பி பிரதாபன், புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், சாத்தான்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.