புதன், 1 ஜூலை, 2020

சாத்தான்குளம் சம்பவம்; மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை ஹைலைட்ஸ்

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், அவர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரிடம் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தி உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு அறிக்கை அனுப்பினார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த அறிக்கையில் இடம் பெற்ற முக்கியமான விஷயங்களை ஐ.இ. தமிழ் வாசகர்களுக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நீதித்துறை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு சமர்ப்பித்த அறிக்கையில், “ஜூலை 28-ம் தேதி நீதிமன்ற ஊழியர்களுடன் 12.45 மணி அளவில் சென்றேன். அங்கே காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார், எஸ்.பி.பிரதாபன் இருவரும் ஆய்வாளர் அறையில் இருக்கின்ற நிலையில் உள்ளே நுழைந்தேன். அவர்கள் இருவரும் எவ்வித வரவேற்பு அறிகுறியும் இல்லாமல் ஒருமுறைகூட முறையாக வணக்கம் செலுத்தாமல் அலட்சிய மனப்பான்மையுடனும் பொறுப்பற்ற தன்மையுடனும் நடந்துகொண்டனர்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார் உடல்பலத்தைக் காட்டுவதான அசைவுகளை செய்துகொண்டு ஒரு மிரட்டும் தொனியிலான பார்வையுடனும் உடல் அசைவுகளுடனும் இருந்தார்.

பொது குறிப்பேடு உள்ளிட்ட பதிவேடுகளை கேட்டபோது அவர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை ஒருமையில் அழைத்து அவர்களை எடுத்துக்கொண்டு வரச்சொல்லிவிட்டு நின்றிருந்தார்.

காவல்நிலையத்தின் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் ஆய்வு செய்தபோது, அதில் போதுமான ஸ்டோரேஜ் இருந்தபோதிலும் தினசரி பதிவுகள் அழிந்துவிடும்படி செட்டிங் செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்த ஜூன் 19ம் தேதி நாள் முதலான எவ்விதப் பதிவுகளும் கணினியில் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. முக்கிய நேரடி சாட்சியான அதன் தரவுகளை பதிவிறக்கம் செய்யும் பொருட்டு அது என்னால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.

காவலர் மகாராஜா என்பவர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர் கேள்விப்பட்ட நிகழ்வுகள் குறித்து பயத்துடன் சரிவர பதில் அளிக்கவில்லை.

தலைமைக் காவலர் ரேவதி வாக்குமூலம் தொடங்கப்பட்டு சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

ரேவதி தான் சாட்சியம் சொல்வதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் தான் சாட்சியம் சொல்வதை வெளியில் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் என்றும் பயந்தார்.

தந்தை மகனை விடியவிடிய லத்தியால் அடித்ததாகவும் ரத்தக்கறை டேபிளில் படிந்திருப்பதாகவும் அதைக் கைப்பற்ற வேண்டும் என்று ரேவதி கூறியதாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த காவலர்களிடம் லத்தியை கொடுக்கும்படி கூறியபோதும் அவர்கள் காதில் விழாதது போல இருந்தனர். கட்டயாப்படுத்திய பிறகு அவர்கள் லத்தியை ஒப்படைத்துவிட்டார்கள்.

மகாராஜன் என்பவர் என்னைப் பார்த்து உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா என்று என் முதுகிற்குப் பின்னால் என் காதில் விழும்படி பேசி அங்கே ஒரு அசாதாரண சுழ்நிலையை உருவாக்கினார் என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அங்கிருந்த காவலர் ஒருவரிடம் லத்தியைக் கேட்டபோது அவர் எகிறி குதித்து தப்பிச்சென்றுவிட்டார் என்று நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.