காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா புது டெல்லியில் உள்ள அவருடைய அரசு பங்களாவை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பிரியங்கா காந்திக்கு அளித்த நோட்டீஸில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம், 2019 நவம்பரில் அவரது எஸ்பிஜி பாதுகாப்பு அட்டை மத்திய அரசால் வாபஸ் பெரப்பட்டதை அடுத்து, பங்களாவின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அவருடைய 35 லோதி எஸ்டேட் பங்களாவை ஒரு மாதத்திற்குள் காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு காலி செய்யப்படாவிட்டால் அவர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எஸ்பிஜி பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் இசட்+ பாதுகாப்பு திரும்பப் பெற்றதன் விளைவாக, உங்களுக்கு பாதுகாப்பு அடிப்படையில் அரசு தங்குமிடங்களை ஒதுக்குவதற்கு அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு இல்லை. உங்களுக்கு புது டெல்லியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 பி வீடு எண் 35, லோதி எஸ்டேட் ஜூலை 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.” என்று வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது.