உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஷ் துபே, போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
உத்தபிரதேச மாநிலம் கான்பூர் அருகே 8 போலீசாரை சுட்டுக்கொன்ற பிரபல ரவுடி விகாஷ்துபேவை மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜயினியில் போலீசார் பிடித்தனர். பின்னர் துபேவை கைது செய்து அழைத்து வந்த போது நிகழ்ந்த கார் விபத்தை பயன்படுத்தி துபே தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர். முன்னதாக அவரது கூட்டாளிகளும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இந்த என்கவுன்டர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் விகாஷ்துபே சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைக்க உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் இந்த ஆணையம் 2 மாதத்தில் தனது அறிக்கையை சமர்பிக்கும் என உத்தபிரதேச அரசு கூறியுள்ளது.