புதன், 1 ஜூலை, 2020

சாத்தான்குளம் மரணம்: புதிதாக நியமிக்கப்பட்ட ஐஜி, எஸ்.பி மீது குற்றச்சாட்டு வழக்குகள்

தூத்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் தந்தை மகன் இறந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்கும் நீதித்துறை மேஜிஸ்திரேட் அச்சுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை மாற்றி 2 புதிய காவல்துறை அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை நியமித்தது. தென் மண்டல ஐ.ஜி. பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக புதிய தென் மண்டல ஐ.ஜி.யாக எஸ்.முருகன் மற்றும் எஸ்.பி.யாக எஸ்.ஜெயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கெனவே குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளதால் விவாதமாகியுள்ளது.

தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முருகன் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. ஐ.ஜி முருகனுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் வழக்கு மிக முக்கியமான சர்சைகளில் ஒன்று. அதிமுக அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றச்சாட்டை முக்கிய சர்ச்சைகளில் ஒன்றாக பயன்படுத்தியது. இதில் முருகனின் கீழ் பணிபுரிந்த ஒரு பெண் அதிகாரி பாதிக்கப்பட்டார். தான் பணிபுரியும் தமிழக காவல் துறை போலீசாரிடம் நீதி கிடைக்காததால் இந்த வழக்கை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார்.


பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்தபோது, முருகன் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் (டி.வி.ஐ.சி) இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். உயர்மட்ட அமைச்சர்கள் உட்பட மூத்த ஆளும் கட்சி தலைவர்களுக்கு எதிரான சில ஊழல் குற்றச்சாட்டுகளை கையாளும் சக்திவாய்ந்த பதிவியாக இருந்தது அது. இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மாநில அரசு முதலில் எதிர்த்த போதிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வழக்கின் இடமாற்ற உத்தரவை 2019 ஆகஸ்டில் வெளியிட்டது.

பாதிக்கப்பட்ட பெண் தான் அளித்த புகாரில் அவர் பணிபுரியும் காவல்துறை செயல்படாததால் அவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் தகுதியை மேற்கோள் காட்டி, அந்த அதிகாரிக்கு ஆதரவாக அரசாங்கம் எடுத்துள்ள நிலையை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் வழக்கை தெலுங்கானா மாநிலத்திற்கு விசாரணையை மாற்றியது. பின்னர், முருகனின் மேல்முறையீட்டின் பேரில் உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. நீதிமன்ற உத்தரவுகள் அவருக்கு சாதகமாக இருந்தன. இதன் விளைவாக விசாரணை தாமதமானது.

எஸ்.ஜெயகுமார், தூத்துக்குடி எஸ்.பி. குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்.

சாத்தான்குளம் நீதிமன்றக் காவல் கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், குட்கா ஊழலில் பல மணி நேரம் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் மத்திய குற்றப்பிரிவுடன் இணைந்து காவல்துறை துணை ஆணையராக பணியாற்றிய ஜெயகுமார், துணை ஆய்வாளர்கள் முதல் முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ் ஜார்ஜ் மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வரை பலரும் பல கோடி குட்கா ஊழலில் குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்வது பற்றிய குட்கா மோசடி வழக்கில், குட்கா உற்பத்தியாளர்கள் குட்காவை சேமித்து விற்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

முருகனுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கு மற்றும் ஜெயகுமார் சம்பந்தப்பட்ட குட்கா ஊழல் வழக்கு ஆகியவை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக அரசை உலுக்கிய சில முக்கிய சர்ச்சைகளாகும். இந்த நிலையில், குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முருகன், ஜெயக்குமார் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.