ஞாயிறு, 19 ஜூலை, 2020

வேகமெடுக்கும் கேரளா தங்கக் கடத்தல் வழக்கு: லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

கேரளாவில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கு பெட்டிகளில் தங்கம் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணை நடைபெற்றும்  வரும் நிலையில், தூதரகத்தின் பாதுகாப்பு காவலராக பணியாற்றிய  போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு, ஒரு தொலைபேசி உரையாடலுக்குப் பின்  எஸ். ஆர் ஜெயகோஷ் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று, நண்பகல் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் ஜெயகோஷை காவல்துறையினர் மீட்டனர்.    தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் நிர்வாக செயலாளராக பணியாற்றியவர்), சுங்க அதிகாரிகள் சரக்கு பெட்டகத்தை ஆய்வு செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக ஜெயகோஷை  தொலைபேசியில் அழைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயகோஷின் மைத்துனர் வி.எஸ் அஜித் குமார் இது குறித்து கூறுகையில்,”  கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருகிறார் இந்த வழக்கில் அவரை வேண்டுமென்றே  சம்பந்தப்படுவார்கள் என்ற பயம் அவரிடம் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

தான் சில அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக எங்களிடம் தெரிவித்தார். வியாழக்கிழமை இரவு, அவருடன் பணிபுரிந்த காவலரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்குப் பின், அவரைக் காணவில்லை” என்றும் அஜித் குமார் தெரிவித்தார்.

ஜெயகோஷின் வாக்குமூலத்தை மிக விரைவில் பதிவுசெய்து, கூறப்படும் அச்சுறுத்தல் தொடர்பாக விசாரிப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வரும்  எஸ். ஆர் ஜெயகோஷ் தன்னை ஒரு நிரபராதி என்று தெரிவித்தார் .