உடல்நிலை சரியில்லாத கைதிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக ‘Panic button’ வசதியை ஆக்ரா சிறை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் சிறைக் கைதிகளும் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்பு உறுதி செய்யப்பட்ட கைதிகளுக்கு மருத்துமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பாதுகாப்பாக சிறை ஊழியர்கள் நிர்வகிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்றால் உதவி கேட்கும் வகையில் ‘Panic button’ வசதியை ஆக்ரா சிறை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கைதிகளுக்கு மருத்துவ உதவி தேவையென்றால் இந்த பொத்தானை அழுத்தினால் போதும். அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். கைதிகள் இந்த பொத்தானை அழுத்தினால், சிறையின் பிரதான வாசலில் உள்ள அலாரம் அடிக்கும். அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாவலர் உள்ளே இருக்கும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் கொடுப்பார் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் காலதாமதம் இன்றி உடல்நலம் சரியில்லாத கைதிகளுக்கு உடனடியாக மருத்துவ வசதியை வழங்க முடியும் என கூறுகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா சிறையில்தான் இதுபோன்ற வசதி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை முயற்சியாக சிறையில் இதனை பொருத்தியுள்ளனர். அதன்பிறகு மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். ஆக்ரா சிறை நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.