வெள்ளி, 3 ஜூலை, 2020

வெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

வெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுவாழ் தமிழர்கள் பேரிடர் சூழலில் வேலை  பாதிக்கப்பட்டு பரிதவிப்பதால், அவர்களின் குடும்பத்தார் இங்கே பரிதவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பின் நிலையையும், உணர்வையும் புரிந்துகொள்ளக்கூடிய சூழலில் மத்திய, மாநில அரசுகள் இல்லையோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள், தாயகம் திரும்புவதற்கான விமானச் சேவைகளை இயக்க மத்திய அரசுக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்பும் தமிழர்களுக்கான மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின், இனியும் அலட்சியம் காட்டாமல், வெளிநாடுவாழ் தமிழர்களின் நிலையை புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.