வியாழன், 3 செப்டம்பர், 2020

பப்ஜி விளையாட்டு உள்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை

 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பப்ஜி விளையாட்டு உள்பட 118 செயலிகளை மத்திய அரசு புதன்கிழமை தடை செய்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மொபைல் விளையாட்டான பப்ஜி விளையாட்டு செயலி உள்பட 118 ஆப்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் புதன்கிழமை தடை விதித்துள்ளது.

பப்ஜி மொபைல், நார்டிக் மேப், லிவிக், பப்ஜி மொபைல் லைட், விசாட் வொர்க் அண்ட் விசாட் ரீடிங ஆகிய மொபைல் செயலிகள் தடை செய்யப்படுள்ளன. மத்திய அரசு ஜூன் மாதம் சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளை தடை செய்தது. மேலும், ஜூலை மாதம் 47 ஆப்களையும் மத்திய அரசு தடை செய்தது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்திய பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கும் 118 மொபைல் செயலிகளை தடை செய்யப்படுகிறது” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூன் 29ம் தேதி, மோபைல் செயலிகளில் இருந்து அச்சுறுத்தும் தன்மை வெளிப்படுவதை சுட்டிக்காட்டி, 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இதில் சீனாவைச் சேர்ந்த பிரபலமான டிக்டாக், ஷேர்இட், யூசி பிரவுசர், கிளப் ஃபேக்டரி, கேம் ஸ்கேனர் ஆகிய சீன ஆப்கள் தடை செய்யப்பட்டன. அப்போது, மத்திய அரசு, “இறையாண்மை, நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்பாடுகளை இந்த செயலிகள் ஈடுபட்டுள்ளன என்ற தகவலின் அடிப்பையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.