வெள்ளி, 4 செப்டம்பர், 2020

43 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய இருக்கிறது திமுக.

 43 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய இருக்கிறது திமுக. செப்டம்பர் 9-ம் தேதி ‘ஸூம் மீட்டிங்’காக நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் போட்டியின்றி பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன். அதேபோல டி.ஆர்.பாலு, பொருளாளர் ஆவதும் உறுதி ஆனது.

திமுக.வின் 4-வது பொதுச்செயலாளர் ஆகிறார், மூத்த தலைவரான துரைமுருகன். இந்த இயக்கத்தை தோற்றுவித்த அறிஞர் அண்ணா, கட்சியின் முதல் பொதுச்செயலாளர் ஆனார். ‘கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்தான்’ என குறிப்பிட்ட அண்ணா, தலைமைப் பதவியை பெரியாருக்காக காலியாக வைத்தார்.

அண்ணா மறைவைத் தொடர்ந்து, 1968-ல் நாவலர் நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளர் ஆனார். சுமார் 9 ஆண்டுகள் அந்தப் பொறுப்பை வகித்த நெடுஞ்செழியன், 1977-ல் மக்கள் திமுக என தனி இயக்கம் கண்டார். அதையடுத்து பேராசிரியர் அன்பழகன், திமுக பொதுச்செயலாளர் (பொறுப்பு) ஆனார். 1978-ல் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில்தான் பொதுச்செயலாளராக பேராசிரியரின் தேர்வு அறிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச்-ல் பேராசிரியர் அன்பழகன் மரணம் அடைகிற வரை, 43 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் அமர்ந்திருந்தார். அதன்பிறகு மூத்த தலைவரான துரைமுருகன் அந்தப் பொறுப்புக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதற்கான அவர் வகித்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் கொரோனா தொற்று காரணமாக பொதுச்செயலாளர் தேர்தல் தள்ளிப் போனதால், மீண்டும் பொருளாளர் பொறுப்பை அவரிடம் வழங்கினார் ஸ்டாலின்.

இந்தச் சூழலில் செப்டம்பர் 9-ம் தேதி இணையவழிக் கூட்டமாக திமுக பொதுக்குழு நடக்கிறது. இதில் துரைமுருகன் புதிய பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக தனது பொருளாளர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்த துரைமுருகன், வியாழக்கிழமை ( செப். 3) பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுவை அண்ணா அறிவாலயத்தில் தாக்கல் செய்தார். எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி ஆனது.

அதேபோல காலியான பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். அவரும் இன்று மனு தாக்கல் செய்தார். அவரையும் போட்டியின்றி தேர்வு செய்ய இருக்கிறார்கள். இன்று இணையவழி மூலமாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்தத் தகவலை தெரிவித்து, ஒப்புதல் பெற்றிருக்கிறார் ஸ்டாலின்.

செப்டம்பர் 9-ம் தேதி பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருப்பது குறித்து துரைமுருகன் கூறுகையில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இயக்கம் திமுக. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் பதவி என்பது மிக உயர்ந்தது, பொறுப்பு வாய்ந்தது. பல கடமைகளை உள்ளடக்கியது. அண்ணா இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார், நாவலர் நெடுஞ்செழியன் இருந்துள்ளார். எங்கள் பேராசிரியர் இருந்துள்ளார்.

அண்ணாவும், நெடுஞ்செழியனும், அன்பழகனும் திமுகவை உருவாக்கியவர்கள். நான் அந்த இயக்கத்தில் தொண்டனாகச் சேர்ந்து அவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, ஒரு அதிர்ச்சியும் இருக்கிறது. அந்த மாபெரும் தலைவர்கள் ஆற்றிய பணியில் நான் செயல்பட முடியுமா என்கிற பயம் இருக்கிறது. ஆக, பயம் கலந்த மகிழ்ச்சி எனக்கு’ என்றார் துரைமுருகன்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், ‘எங்கள் தலைவர் ஸ்டாலின் என்னைப் போலவே இந்த இயக்கத்தில் தொண்டாற்றி, உழைத்து உழைத்து இந்த இயக்கத்தின் தலைவராக வந்துள்ளார். எங்களுக்கு எங்கள் இயக்கத்தில் ஏற்படுகிற எதுவும் சவால்தான். அதை நானும், தலைவரும் இயக்கத்தில் உள்ள முன்னணித் தலைவர்களும் சேர்ந்து பேசி, அந்தச் சவால்களை எதிர்கொள்வோம்.

பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் என்றைக்கும் உள்ளது. அதை மாற்றவில்லை. தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஒரு நிலையில் ஏதாவது தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, யார் முடிவைச் சொல்லவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அப்போது தலைவர் தலையிட்டு அவர் சொல்வதுதான் இறுதி முடிவு. ஆகவே, தீர்ப்பு சொல்லும் இடத்தில் தலைவர் இருக்கிறார்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.