நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, பொதுப் போக்குவரத்து பல்வேறு மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் மெட்ரோ ரயில் சேவையும் அடங்கும்.
இந்த சூழலில் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து வரும் செப். 1 முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களையும் நிபந்தனையுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7 ம் தேதி முதல் இயங்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னையில் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவை விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில்கள் செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்குகின்றன.
அதே நேரம் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் முன்பு 20 நொடிகள் மட்டுமே மெட்ரோ ரயில் நின்று செல்லும். ஆனால் இனி 50 நொடிகள் நிற்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் கார்டு மற்றும் QR ஸ்கேன் முறையில் டிக்கெட் வழங்கப்படும். லிப்ட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் மூன்று பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.ரயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமர வேண்டும்
மக்கள் நெரிசலில் சிக்காமல் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.