வெள்ளி, 4 செப்டம்பர், 2020

ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் கேம்களை தடை செய்ய ஆந்திர அரசு முடிவு!


Image

இளைஞர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வதால் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. 

 

இந்தியா சீனா இடையே ஏற்பட்ட எல்லை மோதலை தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது. இது டிக் டாக் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இளைஞர்களின் பிரபல வீடியோ கேமான பப்ஜியை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ள பப்ஜி பிரியர்கள் சமூக வலைதளங்களில் தங்களது சோகத்தை வெளிபடுத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் இளைஞர்களிடம் பிரபலமடைந்த மற்றொரு ஆன்லைன் கேம் ஆன ரம்மி, போக்கர் உள்ளிட்ட கேம்களுக்கு தடை விதிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநிலத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா (நானி), ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை ‘தவறாக வழிநடத்துவதன் மூலம்’ அவர்களை சேதப்படுத்தும் ஒரு கருவியாக மாறியுள்ளதாக தெரிவித்தார். எனவே இளைஞர்களைப் பாதுகாக்க இதுபோன்ற அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார். 

 

இதன்படி இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அபராதமும் ஒரு வருடம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையும் இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.