இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய T- சர்ட்கள் திருப்பூரில் உற்பத்தியாகி அயல்நாடு வரை செல்லும் அளவு ட்ரெண்டாகி இருப்பதாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்
சமீப காலமாக மத்திய அரசு பல்வேறு வகைகளில் இந்தியை திணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் யுவன் ராஜா இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் அணிந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன சில நிமிடங்களிலேயே அவை டுவிட்டர் டிரெண்டிங்கிலும் முதலிடத்தை பிடித்தது. இதற்கு அடுத்தபடியாக திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் இந்நிகழ்வு பெரும் விவாதத்திற்குள்ளாகியது.
இந்நிலையில் இந்த டீ-சர்ட்டுகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் திருப்பூரில் அவற்றுக்கான ஆர்டர்களும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் முதலில் இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய வடிவத்தை அளித்ததை கொண்டு உற்பத்தி செய்ததாகவும் ஆனால் அவை இந்த அளவிற்கு ட்ரெண்டிங் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள் தற்போது கட்சிகளைக் கடந்து இளைஞர்கள் மாணவர்கள் என அனைவரும் இந்த டீசர்ட் களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதோடு தங்களுக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாது அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் தமிழ் பேசும் மக்களிடமிருந்து ஆர்டர்கள் வரத் துவங்கி இருப்பதாகவும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதோடு , அவை தங்களிடம் இருந்து அயல் நாடுகள் வரை செல்வது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.