சனி, 11 நவம்பர், 2017

ரியான் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! November 11, 2017

ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்கில் தங்கள் மகன்மீது பொய்வழக்குப் பதிந்த காவல்துறையினருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக கைதான வாகன நடத்துநரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

ஹரியானா மாநிலம் குர்கான் ரியான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த பிரதியுமன் என்கிற மாணவன், கடந்த செப்டம்பர் மாதம் கழுத்தறுபட்ட நிலையில் பள்ளியின் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டான். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை கிளப்ப தொடங்கியது. பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் நாடு முழுவதும் எழத் தொடங்கின. மாணவன் கொலையால் ஹரியானா காவல்துறைக்கு அழுத்தம் அதிகரித்தது. இதனை அடுத்து அந்தப் பள்ளியின் பேருந்து நடத்துநரான அசோக் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அசோக் குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்தனர்.

இதனிடையே பள்ளி மாணவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவன் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 

சிபிஐ விசாரணை இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. பள்ளியில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பதினோராம் வகுப்பு மாணவன் ஒருவனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஏற்கனவே பேருந்து நடத்துநர் கைது செய்யபட்ட போது மாநில காவல்துறையினர் தெரிவித்த தகவல்களுக்கு நேர் எதிராக அமைந்திருந்தது சிபிஐ விசாரணையில் வெளியான தகவல்கள்.
Image

கைதான 11ம் வகுப்பு மாணவன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் சரிவர படிக்காததால் தேர்வை தள்ளி போடவும், பள்ளிக்கு விடுமுறை அளிப்பதற்காகவும் 2ம் வகுப்பு மாணவனை கொன்றதாக அதிர்ச்சி தகவலை 11ம் வகுப்பு மாணவன் தெரிவித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக 3 நாட்களாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே கைதான பேருந்து நடத்துநரின் குடும்பத்தினர், ஹரியானா காவல்துறையினர் மீது வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளனர். தனது மகன் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளது சிபிஐ விசாரணையில் தெளிவாகி உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பதற்றத்தை தணிக்க அப்பாவி ஒருவர் மீது பொய் வழக்கு தொடர்வது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மேலெழும்ப தொடங்கியுள்ளது. இந்த கேள்விகளுக்கான விடை காவலர்களை தண்டிப்பதன் மூலமும், வருங்காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதிலுமே அமைந்துள்ளது

Related Posts: