வெள்ளி, 22 ஜூன், 2018

குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வாகுமா முருங்கை? June 22, 2018

உலகில் உள்ள குடிநீர் பற்றாக்குறைக்கு, இந்தியாவில் உள்ள முருங்கை மரம் தீர்வாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்  Stephanie Velegol என்பவர் முயற்சி செய்துள்ளார். அதாவது முருங்கை விதைகளை பயன்படுத்தி, f-sand என்னும் முறையில் தண்ணீரை எளிதில் வடிகட்டி உபயோகப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முருங்கை விதைகளை துகள்களாக்கி, அதனுடன் சிறிது அளவு தண்ணீர் கலந்து, அந்த கலவையில் மணலை போட்டு, தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளும் இந்த முறையில், தண்ணீர் அதி சுத்தமாவதுடன், தண்ணீரில் கலந்திருக்கும் நோய்க்கிருமிகளும் முற்றிலுமாக அழிந்துவிடும் என Velegol தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிக அளவு உணவு பயன்பாட்டிற்காக முருங்கை மரம் வளர்க்கப்படுகிறது. பழங்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தண்ணீரை சுத்தம் செய்வதற்காக முருங்கை விதைகளை பயன்படுத்தினர். ஆனால், அந்த முறையை பின்பற்றினால் அடுத்த 24 மணி நேரத்தில் தண்ணீர் அசுத்தமாகிவிடும். ஆனால், இந்த f-sand முறையை பயன்படுத்தினால், நீண்ட நாட்களுக்கு தண்ணீர் சுத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

F-sand முறையை பயன்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், முருங்கை விதையில் உள்ள புரத சத்து, மிக கடினமான அசுத்தங்களையும் உறையச்செய்துவிடும் எனவும் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கும் குடிநீராக மாற்றுவதற்கும் இது ஒரு சிறந்த முறை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், குறைந்த செலவில் சுத்தமான தண்ணீர் வேண்டும் என நினைக்கும் நாடுகளுக்கு இந்த முறை ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது