சனி, 2 ஜூன், 2018

தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணையத்தினர் இன்று நேரில் விசாரணை! June 2, 2018

Image

தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணையத்தினர், இன்று நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கடந்த 22-ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  போராட்டத்தின் போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள், இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தின் போது, எரிக்கப்பட்ட வாகனங்கள், மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தை பார்வையிட்ட, மனித உரிமை ஆணையத்தினர் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற மாநில மனித உரிமை ஆணையத்தினர், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், ஓரிரு நாளில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதனிடையே, தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவுபடி, மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழரசன் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினர். 

இதனைத் தொடர்ந்து, அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களை சந்தித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறுஉடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ஸ்னோலின் உடலை வழங்குவது தொடர்பாக, அவரது உறவினர்களிடம் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பேசிவருவதாக கூறினார்.

ஒரு காலை இழந்த பிரின்ஸ்டனுக்கு நவீன செயற்கை கால் மற்றும் அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.