நேற்றைய தினம் (14-06-18) கூகுள் தேடுதலில் இரண்டு ஆங்கில வார்த்தைகளை இந்தியர்கள் அதிகமாக தேடியுள்ளனர். எதற்காக என தெரிந்துகொள்வோம்..
Fallacious மற்றும் tendentious என இரண்டு ஆங்கில வார்த்தைகள் நேற்றைய தினம் அதிகமான இந்தியர்களால் தேடப்பட்ட வார்த்தைகளாக திகழ்ந்தன.
காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமைகள் மீறல் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை கடுமையாக சாடியிருந்ததாக அந்த அறிக்கை இருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை கடுமையாக சாடிய இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளக்கம் ஒன்றை அளித்திருந்தது.
இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட மறுப்பு அறிக்கையில் Fallacious (தவறான), tendentious (சார்புடைய), motivated (உள்நோக்கம்), overtly prejudiced (வெளிப்படையாக பாரபட்சம்), false narrative (தவறான விளக்கம்) ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது, பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறும்விதமாகவும் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது, அதன் குறிப்பிட்ட சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறையின் அந்த மறுப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருந்த Fallacious மற்றும் tendentious என்ற அந்த இரண்டு வார்த்தைகளே கூகுளில் இந்தியர்களால் நேற்று அதிகம் தேடப்பட்ட வார்த்தகளாக அமைந்தன.