ஆளுநர் ஆய்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விளக்கமளிக்காததை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அறிக்கை குறித்து பேசினார். அப்போது, ஆளுநர் மாவட்ட அதிகாரிகளை சந்திப்பதில் சட்டத்தில் தடை இல்லை எனவும், தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் ஆய்வுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தலைமை செயலாளரிடம் ஒப்புதல் பெற்றுதான் ஆளுநர் ஆய்வு நடத்துகிறாரா, இது முதலமைச்சருக்கு தெரிந்திருந்தால் அதனைப் பற்றி அவர் விளக்கமளிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரினார். ஆளுநர் சுற்றுப்பயணம் சாதாரண ஒன்று எனக் கூறிய சபாநாயகர், அதனை விவாத பொருளாக மாற்ற தேவையில்லை என தெரிவித்தார்.
முதல்வர், துணை முதல்வர் பதிலளிக்க வேண்டியது தொடர்பாக தானே முடிவு செய்ய வேண்டும் என்றும் சபாநாயகர் கூறினார். இதனால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்