18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பில் அதிருப்தி அடைந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி முதலமைச்சர் பழனிசாமி, முறைகேடுகளை மறைக்க முயல்வதாகவும், எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் நேரில் மனு அளித்தனர்.
இதனை அடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று மதியம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் வெளியிட்ட உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.
சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.
நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து வழக்கு 3வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்கப்போகும் 3வது நீதிபதி யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில், 3வது அமர்வு தீர்பளிக்கும் வரை இடைத் தேர்தல் நடத்த தடை தொடரும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு இன்று தனது தீர்ப்பில் தெரிவித்தது.