வியாழன், 14 ஜூன், 2018

பிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி? June 14, 2018

அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜகவும், காங்கிரசும் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

2019 மக்களவை தேர்தல். ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜகவும், காங்கிரசும் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன. 

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு பிரபலங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தமிழகத்தில் நடிகை வரலட்சுமியை, பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் அண்மையில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். மோடி அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பேசும் அவர், தமது உரையால் மக்களை கவர்ந்து வருகிறார். 

தேர்தல் கணக்கில் எப்போதும் காங்கிரசை விட மேலாகவே நிற்பது பாஜக. 2014ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற கோஷத்தோடு பயணித்த பாஜகவிற்கு தொடர் வெற்றிகள் கிட்டியது. வாக்குகளை எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்ற சூத்திரம் பாஜகவிற்கு தொடர்ந்து கைகொடுத்தது.

தேர்தல் பிரச்சாரத்தை ஆக்ரோசமாகவும், உணர்வுபூர்வமாகவும் அணுகுவதே பாஜகவின் வழி. அதனை முறியடிக்க முடியாமல் திணறியது காங்கிரஸ். ஆனால் ஸ்லோ அண்ட் ஸ்டெடி என்ற பார்முலாவை கையிலெடுத்து பாஜகவை முந்த தயாராகி விட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஆய்வு முடிவுகள் வெளிவந்திருப்பது பாஜகவினருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றியின் விளிம்பு வரை சென்ற பாஜக, கடைசியில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோர் பாஜக அரசின் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மக்கள் மத்தியில் பாஜக தனது செல்வாக்கை 7% இழந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இன்னும் சில மாதங்கள் இதே நிலை நீடித்தால், பாஜக தனது செல்வாக்கை 30% இழந்துவிடும் எனவும் கூறப்படுகிறது. 

நடுத்தர மற்றும் வயதானவர்களின் வாக்குகளை எளிதாக பெறும் திறமையை ராகுல் கொண்டிருந்தாலும், இந்த விஷயத்தில் மோடியின் பங்களிப்பு மோசமான நிலையிலே உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மோடியின் ஆட்சியில் ஊழல் அதிகம் உள்ளதாக 60% பேர் கருதுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 

2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுடன் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜகவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்பதில் துளியளவும் ஐயமில்லை... 

ஆய்வு முடிவுகள் களத்தில் எதிரொலித்தால், காங்கிரஸ் இல்லா இந்தியா என்ற பாஜகவின் கனவு முழுவதுமாக தகர்க்கப்பட்டு விடும் என்பதே நிதர்சனம்.