வியாழன், 21 ஜூன், 2018

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலையின் சாதக-பாதகங்கள்! June 21, 2018

Image

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை பற்றிய பேச்சுகளும் விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் 8 வழி சாலை என்றால் என்ன? அதில் அமையபோகும் வசதிகள், கையப்படுத்தப்படும் நிலங்கள் பற்றிய ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு.

சென்னையிலிருந்து சேலம் வரையிலான பசுமை வழித்தடம் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதைவிட, இயற்க்கைக்கும், மக்களுக்கும் பெரும் சுமை சேர்ப்பதாய் இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முழங்கும் கூற்றை ஆராய்கிறது இந்த காட்சித்தொகுப்பு. 

பாரத்மாலா பரியோஜனா என்ற மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் சுமார் 50,000 கிலோ மீட்டர் அளவிலான நெடுஞ்சாலைகள் அமைகப்பட்ட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள். 

அந்த குறிக்கோளை எட்டும் வண்ணம் தமிழக அரசு பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவதற்காகவும், வணிக லாபத்திற்காகவும் சென்னையிலிருந்து சேலம் வரையிலான  பசுமைச்சாலையை அமைக்கவிருக்கிறது.

ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை மூலமாக 360 கிலோ மீட்டரும், சென்னை- மதுரை நெடுஞ்சாலை மூலமாக 350 கிலோ மீட்டரும் பயணித்து சேலம் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அமைக்கப்படவிருக்கும் பசுமை வழிச்சாலை மூலமாக பயண நேரம் 5 மணி நேரமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி இந்த நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து கொள்ளளவானது தற்போதைய சூழலில் 100-ல் இருந்து 150 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் இந்த சாலைகளில் ஒரு வருடத்தில் சுமார் 10,000 பேர் விபத்துகளில் சிக்கி அதில் 3000 பேர் உயிரிழக்கிறார்கள் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 10 வருடங்களில் இவ்விரு நெடுஞ்சாலைகளிலும் வாகன எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும், உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என்பதால், அதை தவிர்க்கவே தமிழக அரசு சென்னை முதல் சேலம் வரையிலான  8 வழிச்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.

பயன்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்தினால் சாலையின் இருபுறமும் சுமார் 40,000 வீடுகளும், தொழிற்சாலைகளும் அகற்றப்பட வேண்டும் என்பதாலும், தற்போதைய சூழலில் இது சாத்தியமற்றது என்பதாலும், மாநில அரசு இந்த பசுமை வழிச்சாலை மக்களின் பிரச்னைகளை குறைக்க மிகச்சிறந்த தீர்வாக அமையும் என்று கருதுகிறது. அதுமட்டுமின்றி, இந்த பசுமை வழிச்சாலை மூலமாக விவசாயப்பொருட்களை எளிதாகவும், விரைவாகவும் கொண்டு போய் சேர்க்கமுடியும் என்றும், எரிப்பொருள் செலவு குறையும் என்றும் தெரியவருகிறது. மேலும் இந்த பசுமை வழிச்சாலை, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை இணைத்து வணிக மற்றும் பொருளாதார வழித்தடங்களை மேம்படுத்த உதவும் என்றும் புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதோடு, கிராமப்புறத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பிற்கு ஏற்றார்போல் இரண்டரை மடங்கிலிருந்து 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இணையான 2 மடங்கு காடுகள் வளர்க்கப்படும் என்றும் பசுமை வழித்தடத்தின் இருப்புறமும் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

இந்த சாலை சுமார் 10,000 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. 8 வழி சாலையாக அமையவிருக்கும் சென்னை- சேலம் பசுமை வழித்தடம், கிட்டத்தட்ட  277.3 கி.மீ நீளம் கொண்டதாக இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டங்களில் இந்த பசுமை சாலை கடக்கும் தூரம் எவ்வளவு என்பதை பார்க்கும் போது, காஞ்சிபுரத்தில் 59.1 கி.மீ, திருவண்ணாமலையில் 123.9 கி.மீ, கிருஷ்ணகிரியில் 2 கி.மீ, தர்மபுரியில் 56 கி.மீ, சேலத்தில் 36.3 கி.மீ என இத்தனை கிலோ மீட்டர் தூரம் விளைநிலங்கள், காடுகள், மரங்கள், மலைகள், கிராமங்கள் ஆகியவற்றை அழித்து வரவிருக்கிறது இந்த சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை. 

வனப்பகுதிகளில் இது எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை பார்க்கும் போது, ராவண்டிவாடி, அனந்தவாடி, நம்பேடு, சிறுவாச்சூர், பள்ளிப்பட்டு ஆகிய வனப்பகுதிகள் வழியாக சுமார் 13.29 கி.மீ தூரம் பசுமை வழிச்சாலை செல்லவிருக்கிறது.

ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, சித்தேரிமலை, கவுத்திமலை, வேதிமலை ஆகிய மலைப்பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் தெரியவருகிறது. 

நிலப்பகுதியில் 70 மீட்டர் அகலத்தில் இருக்கும் இந்த சாலை, வனப்பகுதியில் செல்லும் போது 45 முதல் 50 மீட்டராக குறையும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை திட்டத்தை நிறைவு செய்வதற்காக சுமார் 1900 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கின்றன என்று அரசாங்கத்தின் தரப்பில் சொல்லப்பட்டாலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருக்கும் தகவல்கள் படி சுமார் 2560 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

அதுமட்டுமின்றி 120 ஹெக்டேர் காடுகள் மற்றும் 8 மலைகள் அழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த பசுமை வழிச்சாலையில் 23 பெரிய பாலங்கள், 156 சிறிய பாலங்கள், 9 மேம்பாலங்கள், 22 வாகனங்களுக்கான கீழ் வழிப்பாதைகள், 2 பாலங்களுடனான கீழ்வழிப்பாதைகள், வனப்பகுதியில் 3 சுரங்கப்பாதைகள், 8 சுங்கச்சாவடிகள், 10 பேருந்து மற்றும் லாரி நிறுத்தங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. 

இத்தகைய பசுமை வழிச்சாலையால் யாருக்கு லாபம் ? என்ன லாபம் ? என்று பார்த்தால், இவ்வளவு நேரமாக நாம் வரிசைப்படுத்திய விஷயங்களின் விகிதத்தில் கால் பங்கு கூட லாப விகிதம் கிடையாது என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. 

சென்னையிலிருந்து சேலம் செல்லும் பயண நேரத்தை குறைக்கவும், பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்தவும் வாழ்வாதாரமற்ற விவசாயிகளின் விளைநிலங்களும், உறைவிடங்களும் பசுமை வழிச்சாலையாக மாற்றப்பட வேண்டுமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி  கவலை தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு, ஒரே மாதத்தில், சுமார்  106 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்ட  இதே தமிழகத்தில்தான் தற்போது மாநில அரசு, ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தி,  இத்தகைய அழுத்தத்தை வேளாண்குடி மக்களுக்கு தர இருக்கிறதா? என்றும் சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த திட்டத்தால் கிட்டத்தட்ட 10,000 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது விவசாய நிலங்களுக்கு எற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.  விவசாய நிலங்கள்  நகர்புறமாதலுக்கு உள்ளாக்கப்படும் போது, அந்த நிலத்தின் மண் வளம் முற்றிலுமாக பாதிக்கப்படும்,  நீரியல் மாற்றங்கள் சுற்றுப்புற மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும், நிலத்தடி நீர் குறைந்துவிடும், விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள், விவசாய கூலிகள் என அனைவரும் வேலையின்றி நிர்கதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும், கட்டாய இடம் பெயர்தலுக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். இந்த நிலையில் வேறு வேலைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை விவசாயிகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தப்படுத்துவோம் என்று அரசாங்கம் சொல்வது, வேடிக்கையாக இருப்பதாக விவசாய ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர். 

நகர்புறங்களில் கட்டப்படும் நெடுஞ்சாலைகளில் பசுமைச்சூழலை ஏற்படுத்த சாலையின் இருபுறமும் மரங்கள் நட்டு வளர்ப்பது தான் பசுமைவழிச்சாலை, ஆனால் ஏற்கனவே பசுமையாக இருக்கும் காடுகளையும் மரங்களையும் அழித்து சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பது முரணாக பார்க்கப்படுகிறது.




பல்லுயிர் பெருக்கத்தின் மிக முக்கியமான ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதால், தென் மேற்கு பருவ மழைக்காலங்களில் தமிழகத்துக்கு கிடைக்கும் மழை அதிகளவில் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் மூன்றிலிருந்து 4 லட்சம் மரங்கள் வரை இந்த திட்டத்திற்காக வெட்டப்படவிருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகவே இருக்கிறது. வெறும் 6400 மரங்கள் தான் என்று அரசாங்கம் சொன்னாலும் இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது, வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

மலைகளுக்கு இடையே சாலைகள் அமைக்கும் பொழுது ஒன்றாக வாழ்ந்த மிருகங்கள் பிளவுப்பட்ட வாழ்விடத்தை தேர்தெடுக்க நேரிடும். அதுமட்டுமின்றி சின்னச்சின்ன பூச்சிகளிலிருந்து பெரிய மிருகங்கள் வரை இயற்கையோடு ஒன்றோடு ஒன்று வைத்திருந்த சுற்றுச்சூழலியல் தொடர்பு முற்றிலுமாக தடைப்படும். 

ஒரு சமூகத்தின் வாழ்விடத்தை அழித்துவிட்டு, வழித்தடம் அமைப்பது சரியா? 

பசுமை வழித்தடம் என்ற சொல்லுக்கு மாறாக இயற்கையை நசுக்குவது முறையா? 

தொடர்ந்து தமிழகத்தில் இயற்கை வளமும், மனித வளமும் இப்படி சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடாதா? 

என்பது போன்ற கேள்விகள் விவசாயிகள் மத்தியிலும், சமூக ஆர்வளர்கள் மத்தியிலும் வெகுண்டெழுந்து கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.