வெள்ளி, 22 ஜூன், 2018

​வாச்சாத்தி வன்கொடுமை முடிவுற்ற தினம் இன்று! June 22, 2018

3 நாட்கள் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை முடிவுற்ற தினம் இன்று.

வாச்சாத்தி வன்கொடுமை... அதிகார அத்துமீறல்களின் உச்சம் எப்படி இருக்கும் என்பதற்கான ஓர் நிகழ்கால சாட்சி...

தருமபுரி மாவட்டம் பேதாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஓர் வனப்பகுதி தான், இந்த வாச்சாத்தி... சந்தன மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் தான் தமிழக வனத்துறை, காவல்துறை வருவாய் அதிகாரிகள் என ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும் தங்களுடைய வெறிதனத்தை அரங்கேற்றியது. சந்தன மரம் தொடர்பான விவகாரம் ஒன்றில் வனத்துறையினரை வாச்சாத்தி பகுதி மக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி தாக்கலாம் என்ற எண்ணத்தில், வாச்சாத்தி பகுதியையே இல்லாமல் ஆக்கியது  அதிகார வர்க்கம்

விவசாயமும் மலைக்காட்டில் விறகு சேகரிப்பதும், கூலி வேலைக்குச் செல்வதுமே இவர்களின் வருமானத்திற்கான வழி. பகலெல்லாம் உழைத்து விட்டு, இருள் கவ்வும் போதே கூட்டுக்குள் அடைந்து விடுவது வாச்சாத்தியில் வழக்கம். 1992ம் ஆண்டு ஜூன் 20 தேதியன்று சுமார் 200 அதிகாரிகள் போர் தொடுக்க செல்வதை போல வாச்சாத்தியில் நுழைந்தனர். அதிகார வர்க்கத்தின் கோர முகம் எப்படி இருக்கும் என்பதை அந்த மக்கள் அன்று வரை அறிந்திருக்கவில்லை. 

உழைத்து களைத்து இளைப்பாறி கொண்டிருந்த மக்களின் மத்தியில் புகுந்த அதிகார வர்க்கம் வாச்சாத்தி பகுதியையே சூறையாடியது. பெண்களில் 18 பேர் மட்டும் வாகனத்தில் ஏற்றி ஏரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அரசு அதிகாரிகளால் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இதில் 13 வயதான சிறுமியும் அடக்கம். 

வீடுகள் சூறையாடப்பட்டதாகவும். பொருட்கள் கிணற்று நீர், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையால் பாழ்படுத்தப்பட்டதாகவும் கண்ணீர் விட்டனர் மலைவாழ் மக்கள். கந்தலாக்கப்பட்ட பெண்கள் 18 பேர் உட்பட 133 பேர் சந்தன மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். டன் கணக்கில் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டினர் அதிகாரிகள்.  ஜூன் 20 தொடங்கி 3 நாட்கள் தனது வன்முறையாட்டத்தை நடத்தி முடித்திருந்தது அதிகார வர்க்கம்.

இந்த சம்பவம் அரங்கேறி சுமார் ஒரு மாத காலம் யாருக்கும் இந்த விவகாரம் தெரியவில்லை. இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஒன்றில் அரசல் புரசலாக விவகாரம் வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க வாச்சாத்தி என்ற வார்த்தையே முணு முணுக்கப்பட்டன. இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தியும் 20 ஆண்டுகளுக்கு பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது. 
Image
இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள். 

பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேருக்கு 7 ஆண்டுகாலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அதில் 12 பேருக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வாச்சாத்தி வன்கொடுமை அரங்கேறி சுமார் 25 ஆண்டுகள் கடந்து விட்டது... இன்று வரை வாச்சாத்தி வன்கொடுமை என்றவுடன் குலை நடுங்கும்... அந்த கொடூரத்தின் சாட்சிகளாய் இன்றும் வாழும் அந்த மக்களின் மன வடு என்றும் மாறி விடாது என்பதே நிதர்சனம்