புதன், 27 ஜூன், 2018

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என அறிவிப்பு! June 27, 2018

Image

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 7 செம்மொழிகளில் முக்கியமானதாக விளங்கும் தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டொரண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அப்போது அவர் புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் கனடா தமிழ் காங்கிரஸ் துணைத் தலைவரும், தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ, அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்க நிர்வாகிகள் விஜய் ஜானகிராமன், சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தமிழ் இருக்கை அமைக்க 50 லட்சம் டாலர் தேவை என்று அறிவித்த பல்கலைக்கழகத்தின் செயல் இயக்குநர் ஜார்ஜெட் ஜிநாடி, தொடக்க விழாவில் சுமார் 6 லட்சம் டாலருக்கு மேல் நன்கொடை கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஆக்ஸ்போர்ட, கேம்பிரிட்ஜ் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் உட்பட ஐந்து தமிழ் இருக்கைகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும், செம்மொழியாகிய தமிழை அடுத்து பல தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல இது வெற்றிகரமான முயற்சி என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Related Posts: