செவ்வாய், 5 ஜூன், 2018

​நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி! June 5, 2018

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2018-ம் ஆண்டின் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 

இதில்  விழுப்புரம் மாவட்டம் பெருவலூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா 12-ம் வகுப்பில் ஆயிரத்து 125 மதிப்பெண் பெற்ற நிலையில் நீட் தேர்வில் 39 மதிப்பெண் மட்டுமே பெற்ற விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். 

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற போதிலும் அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான இடம் தான் கிடைத்துள்ளது. 

இதற்கு பணம் இல்லாததால் இந்த ஆண்டும் நீட் தேர்வை எழுதியுள்ளார் பிரதீபா. உயிரிழந்த பெருவலூரைச் சேர்ந்த பிரதீபாவின் பெற்றோர்கள் கூலித்தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான கே.சி.எஸ் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர் சரண், 416 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம், மருத்துவப் படிப்புக்கு அவர் தேர்வு ஆவது உறுதியாகியுள்ளது. இத்தனைக்கும் இவர் நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்துக்குச் சென்று படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.