
உலகின் செல்வந்தர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியில் செலுத்துவது ஏன்? எந்த நாட்டிலும் இல்லாத நம்பகத்தன்மை ஸ்விஸ் வங்கி மீது மட்டும் ஏன் வந்தது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
பாஜக 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்ககளை எடுத்து வருவது நாடே அறிந்தததே - இந்த இலக்கை குறிக்கோளாக கொண்டு நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாஜக அரசுக்கு பெருத்த இடியாக அமைந்துள்ளது, ஸ்விஸ் வங்கி தற்போது லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள அறிக்கை.
கடந்த ஆண்டு இந்தியர்கள் செலுத்திய தொகை 2016-ம் ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்விஸ் வங்கி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2017-ம் ஆண்டு கணக்குப்படி ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் சுமார் 7000 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஸ்விஸ் வங்கியில் அந்நாட்டவர் மற்றும் பிற நாட்டவர்கள் டெபாசிட் செய்திருக்கும் மொத்த தொகை 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் ஸ்விட்சர்லாந்திலுள்ள வங்கியில் உலகின் கோடீஸ்வரர்கள் தங்களது பணத்தை டெப்பாசிட் செய்கிறார்கள் ?
பணத்தை டெபாசிட் செய்பவர்கள் பற்றிய விவரங்களை அந்த வங்கி எந்த ஒரு காரணத்திற்காகவும் வெளியிடாது என்ற கொள்கையை பின்பற்றி வருவதுதான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கபடலாம். ஆனால், ஸ்விஸ் அரசு மீதுள்ள நம்பகத்தன்மை தான் உலகின் அனைத்து பணக்காரர்களையும் அந்நாட்டு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வைப்பதற்கான முதன்மை காரணம்.
15ம் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு முறை கூட போர் புரியாத நாடு ஸ்விட்சர்லாந்து. நிலையான அரசு, நிலையான பொருளாதாரம் என எந்தவித சலனமுமின்றி செயல்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச சந்தையில் ஸ்விஸ் கரன்சியான ஃபிராங் எந்தவித ஏற்ற இறக்குமின்றி நிலையான மதிப்புடன் இருந்து வருகிறது. இவை அனைத்தும் உலகின் பணக்காரர்களை ஸ்விஸ் வங்கியை நம்ப வைத்துள்ளது
இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கருப்புப் பணம் குறித்த தகவல்கள் தொடர்பாக இந்திய அரசுக்கும், ஸ்விஸ் வங்கிக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் படி 2018ம் ஆண்டு முதல் ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணம் செலுத்தும் இந்தியர்கள் குறித்து விவரங்கள் இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்.
இந்நிலையில் ஸ்விஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணம் அனைத்தும் கருப்புப்பணம் கிடையாது என்றும் இந்தியர்கள் யாரேனும் கருப்புப் பணத்தை டெப்பாசிட் செய்திருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். எனினும் ஒரே ஆண்டில் 50 சதவீதம் வரை இந்தியர்கள் செலுத்திய தொகை அதிகரித்திருப்பது எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.