சர்வதேச அகதிகள் தினமான இன்று அது குறித்த சிறப்பு செய்தி...
21ம் நூற்றாண்டில் மனித இனம் சந்திக்கும் அதிமுக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக அகதிகள் பிரச்சனை இருக்கிறது.
அகதிகள் என்றவுடன் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், மற்ற நாடுகளில் அடைக்கலம் சேர்வது தான் எல்லாருக்கும் நினைவில் வரும். ஆனால் அகதிகளில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். காலநிலை அகதிகள் அல்லது சூழலியல் அகதிகள். இயற்கை சீற்றங்களினாலும், சூழலியல் மாற்றங்களினாலும் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு நகரத் தொடங்கும் மக்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்.
ஆனால் எந்த சர்வதேச சட்டங்களும் சூழலியல் அகதிகள் என்ற வார்த்தையை அங்கீகரிக்கவில்லை. சூழலியல் மாசுபாடுகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இந்த வார்த்தைகளை அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தெற்காசியாவில் இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சூழலியல் பிரச்சனைகளுக்காக அதிக அளவில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் மூன்று கோடிக்கும் நெருக்கமான எண்ணிக்கையில் சூழலியல் பிரச்சனைகளால் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐநா சபையின் இடம் பெயர்பவர்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள் இந்தியாவிடம் அடைக்கலம் தேடுவது இந்தியாவிற்கு இந்த விஷயத்தில் இரட்டைத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மட்டும் சுமார் இரண்டு கோடி இந்தியர்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். எதிர்பாராத வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் கடல் மட்டமும், மாறிக் கொண்டிருக்கும் காலநிலைகளும் சூழலியல் அகதிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது.
சூழலியல் அகதிகளை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்காததோடு அவர்களுக்கான எந்த சட்ட திட்டங்களும் வகுக்கவில்லை. சூழலியல் அகதிகளுக்கான திட்டங்களை உருவாக்கும் புள்ளிக்கு சர்வதேச சமூகம் பயணிப்பதற்குள் இந்த நூற்றாண்டு மொத்தமும் அகதிகளுக்கென்று சாசனம் செய்து தரப்படும் அவல நிலை உருவாகி விடும் எனக் கவலை தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள். இயற்கையை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே சூழலியல் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற சூழலியல் ஆர்வலர்களின் கருத்து மறுக்க முடியாததாக இருக்கிறது.