தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை என்ற அறிவிப்பை அடுத்து கோவையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பசுமை பைகளின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ள துணி பைகள், மண்ணில் மக்க கூடிய பிளாஸ்டிக் இல்லாத பசுமை பைகள், பேனா, பல் துலக்கும் பிரஸ் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை என்ற தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து பசுமை பைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்துவதே
அரசிற்கு சவாலாக இருக்கும் நிலையில் இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கொண்டு
வந்துள்ள பயோ பைகள் எனப்படும் பசுமை பைகளுக்கே மவுசு அதிகரித்து வருவதாக
அங்காடி பணியாளர்கள் தெரிவித்தனர். மக்காச்சோளம், கப்பை கிழங்கு மற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பைகள் மண்ணில் போட்டால் மூன்று மாதத்தில் மக்கிவிடும்
என்றும் அவர்கள் கூறினர்.
அந்த பையில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் அனைத்திலும் ரசாயனம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்த பைகள் சுடுநீரில் கரையும் தன்மையுடையதாகவும், நெருப்பில் எரித்தால் சாம்பலாகவும் மாறும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
சுற்றுச்சூழல் மீதான அக்கறையோடும், பிளாஸ்டிக் பைக்களை தவிர்க்கும் நோக்கில்
கோவையில் உள்ள பெரிய உணவகங்கள், சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைக்கு மாற்றான
இந்த பயோ பைகளை உபயோகிக்க முன்வந்துள்ளனர். சமுதாயத்தில் சுற்றுச்சூழலை
பாதுகாப்பதில் நமது கடமை என்பதை உணர்த்தும் வகையில் பசுமை பைகளை மட்டுமே
பயண்படுத்துவதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கை மூலப்பொருட்களை கொண்டு பசுமை பைகளை தயாரித்து விற்கமுடியும் என்றும்,
பிளாஸ்டிக் பை தயாரிப்போர்கள், அவர்கள் தற்போது பயன்படுத்தும் இயந்திரங்கள் மூலம் பசுமை பைகளை தயாரிக்க இயலும் என்றும் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று பைகளை உபயோகித்து மாற்றத்தை நோக்கி அடியெடுத்து
வைத்துள்ள கோவை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்க அரசு சார்பிலும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் அதற்கு
ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே பிளாஸ்டிக் இல்லா நகரை உருவாக்க முடியும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.